ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்வு

அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு கீழ் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவு மாகாணம் வருகிறது. உள்ளூர் மக்களைத் தவிர, ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலாப் பகுதிக்கு வருகை தருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது. மளமளவென தீப்பற்றி எரிந்த நிலையில சூறாவளி காற்று வீசியதன் காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது. இதனால், ஏராளமான வீடுகள் தீயில் கருகின. 25,000 ஏக்கர் நிலங்கள் தீயில் நாசமானது.
வீடுகள் மற்றும் செல்போன் கோபுரங்கள் தீயில் எரிந்து நாசமானது, சேத மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காட்டுத் தீயில் சிக்கி மொத்தம் 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹலைனா நகரை சேர்ந்த அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீட்புப் பணிகளில் உதவுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆள் பற்றாக்குறையால் அமெரிக்கா தனது ராணுவத்தை களத்தில் இறக்கியது. இந்நிலையில் ஹவாய் தீவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லவுள்ளார். காட்டுத்தீ பரவியுள்ள பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.



