மூளைச்சாவடைந்த நோயாளிக்கு பன்றியின் சிறுநீரகத்தை மாற்றி ஆய்வு

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை மாற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மனிதருக்கு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் ஒரு மாதம் நன்றாக இயங்கியுள்ளது.
மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் இவ்வாறு நீண்டகாலம் இயங்கியமை இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் நியூயோர்க் பல்கலைக்கழகம் மற்றும் அலபாமா பல்கலைக்கழகங்கள் மனினுக்கு பன்றியின் சிறுநீரகத்தை மாற்றி ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் அவை இரண்டு முதல் மூன்று நாட்கள் மாத்திரமே இயங்கின.
இந்த நிலையில், தற்போது மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் ஒரு மாதங்கள் நன்றாக இயங்கியுள்ளதால், விரைவில் சாதாரண நோயாளிகளுக்கு பன்றியின் சிறுநீரகங்களை பொருத்தும் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும் மனித நோய் எதிர்ப்பு சக்தியுடன் பன்றியின் சிறுநீரகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை ஆராய, மூளைச்சாவடைந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ள சிறுநீரகம் மேலும் ஒரு மாதம் கண்காணிக்கப்பட உள்ளது.



