இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 3 பேர் பலி

#world_news #War #Lanka4
Kanimoli
2 years ago
இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 3 பேர் பலி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. 

அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

 இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரையின் ஜெனின் அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் நேற்று கார் வேகமாக வந்தது.இதனை தொடர்ந்து கார் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் காரில் வந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 3 பேர் கொல்லப்பட்டனர். காரில் இருந்து அதிநவீன எம்-16 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் இஸ்ரேலியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

 சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவின் முக்கிய நபர் நயிப் அபு சுகிக் என்பவரும் அடக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் ஆகிய பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4