கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை மக்கள் வழங்க வேண்டும் - ரணில் கோரிக்கை!
இலங்கையின் முக்கியமான பொருளாதார திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்களை நகருக்கு வெளியே நிர்மாணித்து, நகரத்தில் பெறுமதியான காணிகளை முதலீட்டிற்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரம் உயர் நன்மைகளை அடைய முடியும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு சினமண்ட் கிரான்ட் ஹோட்டலில் இன்று (05.08) முற்பகல் இடம்பெற்ற கட்டிடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து பேசிய அவர், ”கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தை வர்த்தக வாய்ப்புக்காக வழங்கினால், இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு என்ன நன்மை என்பதை சிந்தித்துப் பாருங்கள். அங்கிருந்து ரயில் பாதை வரையிலான நிலத்தை பாரியளவில் பயன்படுத்த முடியும்.
"கொழும்பை மிக அழகான நகரமாக மாற்றும் திறன் உங்களிடம் உள்ளது. திருகோணமலை நகர அபிவிருத்தித் திட்டத்தை நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம். திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு, வெருகளறு வரையிலான சுற்றுலா நகரத்தை உருவாக்க நாங்கள் நம்புகிறோம். அதன் வடிவமைப்பு திட்டங்களுக்கு நீங்களும் பங்களிக்கலாம்.
எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் திட்டங்களும் உள்ளன. முறையான நகர திட்டமிடல் திட்டங்களின் மூலம் ஒவ்வொரு நகரத்தையும் அழகான நகரமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அதற்காக புதிய சட்டத்தை கொண்டு வரவும் நாங்கள் உழைத்து வருகிறோம்.
அந்த நகர மேம்பாட்டு பணிகளுக்கு குறைந்தபட்சம் 10,000 பொறியாளர்கள் தேவை. மேலும், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள். நிபுணர்கள் தேவை." "எதிர்காலத்தில், நாட்டிலும், வெளிநாட்டிலும் கட்டிடக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதற்கான அழைப்புகள் ஏற்கனவே வந்துள்ளன. எனவே, கட்டிடக் கலைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.