ஒன்றரை ஆண்டுக்குள் நாட்டை விட்டு வெளியேறிய 2 000 விரிவுரையாளர்கள்!
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், மேலும் சிலர் கடந்த ஆறு மாதங்களில் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் (FUTA) தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 11,900 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் 6,600 பேர் மட்டுமே உள்ளனர் என்றார்.
பெரும்பாலான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்பவில்லை. அவர்களில் பெரும்பாலோர் சேவையை விட்டு வெளியேறியதாக அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு தெரிவிக்கவில்லை, என்றார்.
2017ஆம் ஆண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 30,000 புதிய மாணவர் சேர்க்கைகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
பின்னர், இது 2021 இல் 34,000 ஆக அதிகரிக்கப்பட்டது, இது 2017 உடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் அதிகமாகும். துரதிஷ்டவசமாக, 2017ஆம் ஆண்டிலிருந்து புதிய விரிவுரையாளர் நியமனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை" என்று பேராசிரியர் ஜெயவர்தன கூறினார்.
“எவ்வாறாயினும், கல்வி அமைச்சருடன் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. கலந்துரையாடலின் போது, தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியானது விரிவுரையாளர்கள் மற்றும் வைத்தியர்களையும் நேரடியாகப் பாதித்துள்ளதாக FUTA சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். அடுத்தவாரம் நிதி இராஜாங்க அமைச்சருடன் மற்றுமொரு கலந்துரையாடல் நடத்தப்படும்” என்றார்.
துரதிர்ஷ்டவசமாக, பொருளாதார வீழ்ச்சி காரணமாக புதிய விரிவுரையாளர்களை நியமிப்பதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
ஆனால் கடந்த 6 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விரிவுரையாளர்களின் எண்ணிக்கைக்கு பதிலாக புதிய நியமனங்களை வழங்குமாறு ஜனாதிபதி அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.