அவசர சேவையை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!
119 பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக தவறான மற்றும் போலியான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான பொய்யான மற்றும் தவறான தகவல்களை வழங்கும் நபருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு தினமும் 3000 முதல் 3500 செய்திகள் வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் செய்திகளை கண்காணிக்கும் போது, அந்த இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பொய்யான தகவல்கள் வழங்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக முக்கியமான மற்றும் அவசரமான தொலைபேசிச் செய்திகளை இயக்குவதில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தாமதங்களைக் கருத்தில் கொண்டு காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.