இந்தியாவில் நடைபெறும் G-20 மாநாட்டில் புட்டின் பங்கேற்பாரா?

இந்தியாவில் நடைபெறவுள்ள G-20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்பாரா இல்லையா என்பதை கிரெம்ளின் மாளிகை இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில், ரஷ்ய அதிபரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது இது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என பதிலளித்தார். எதிர்காலத்தில் இது பற்றி முடிவெடிடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே இந்த மாநாட்டில் புட்டின் கலந்துகொண்டால், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட மேற்கத்திய தலைவர்களுடன் நேருக்கு நேர் உரையாடலில் ஈடுபட முடியும் எனவும், இது சூடான வார்த்தை போராக இருக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உக்ரைன் ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் 8 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அவற்றில் 5 மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகும். குறித்த நாடுகள் அனைத்தும் மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மை கொண்டவை மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய நண்பர்கள் என்று கருதலாம்.
ஆனால் இந்தியாவின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது, ஏனெனில் இந்தியா அந்தக் குழுக்கள் எதையும் சேர்ந்தது அல்ல. இந்தியா ரஷ்யாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருவதுடன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வருகிறது. இதனால், இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்பாரா என்பது இன்னும் விவாதமாக உள்ளது.



