ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ களமிறக்கப்படலாம்!
2024 ஆம் ஆண்டு இடம்பெறுவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க எவ்வித தீர்மானங்களும் இதுவரை எட்டப்படவில்லை எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம் எனவும் குறிப்பிடடுள்ளார்.
அத்துடன் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கும் நிலைப்பாடு எமக்கு கிடையாது எனக் கூறிய அவர், அடுத்த தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.