பாடசாலைகளில் 12 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை!
கொவிட் அனர்த்தத்தின் போது பாடசாலைகள் மூடப்பட்டமையால் ஏற்பட்ட காலதாமதத்தை படிப்படியாக மீட்டெடுத்து, 2024 பாடசாலை கல்வியாண்டின் முதல் தவணையை பெப்ரவரி 21 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2024ஆம் ஆண்டுடன் தொடர்புடைய ஐந்து புலமைப்பரிசில்கள், பொதுத் தரம் மற்றும் உயர்தரம் ஆகிய மூன்று பரீட்சைகளையும் 2024ஆம் ஆண்டிலேயே நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், 2024ஆம் ஆண்டிற்கு தேவையான பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட ஒரு படி முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.
பாடசாலை நிதி மற்றும் அலுவலக நிர்வாகத்தை இலகுவாக நிர்வகிக்க அதிபர்களுக்கு உதவும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய புதிய சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட டஅவர், ஏற்கனவே அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு புதிதாக பன்னிரண்டாயிரம் பேர் பணியாளர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.