தலைவலி அல்லது தலையிடி ஏற்படும் காரணமும் அதன் வகைகளும்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
தலைவலி அல்லது தலையிடி ஏற்படும் காரணமும் அதன் வகைகளும்

பொதுவாக தலைவலி அல்லது தலையிடி ஆண், பெண் பாகுபாடின்றி எல்லா வயதினருக்கும் மண்டைக்குள் ஏற்படும் ஒரு வலியுணர்வாகும். இது நெற்றி அல்லது மண்டைக்குள் உணரப்படும். சிலவேளை இது ஒரு நோயின் அறிகுறியாகவும் செயல்படும்.

 தலைவலி சாதாரண காரணத்தினாலும் வரலாம், தீவிர பாதிப்பினாலும் வரலாம். மண்டை ஓட்டைச் சுற்றியிருக்கும் தமனி, சிரை, தோல் வழியேதான் முதலில் வலி உணரப்படுகிறது.

 பிறகு ரத்தக் குழாய்களின் மூலம் பரவி தலையின் இருபுறங்கள் மற்றும் கழுத்துக்கும் பரவுகிறது. கண்கள், மூக்குத் துவாரங்கள், பற்கள் வழியாகவும் தெரியலாம்.

 பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும். சாதாரண தலையிடியானது தலையில் அமைந்துள்ள (முகம் உட்பட) தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன. 

தசை நார்கள் அதிக நேரம் இழுக்கப்படும்போது, கடைசியில் அது தலைவலியாக உருவெடுக்கின்றது. தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்.

அத்துடன், உயிராபத்தை விளைவிக்கக் கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையளற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக் கட்டிகள் போன்றவற்றின் அறிகுறியாகவும் தலையிடி ஏற்படுகின்றது.

 பெண்களிடையே மாதவிலக்கு காலங்களில் காணப்படும் மிகப் பெரும்பாலான தலிவலிகளுக்கு, பெண்மை இயக்குநீர் (estrogen) அளவின் ஏற்ற இறக்கமே காரணமாகும்.

பொதுவாக சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிறின், பரசித்தமோல், இபுபுரோபின், போன்ற வலிநீக்கி மாத்திரைகளே போதுமானதாக இருக்கக்கூடும்.

 ஆனால், சில குறிப்பிட்ட வகைத் தலையிடிகளுக்கு வேறு பொருத்தமான மருத்துவ முறைகள் தேவைப்படக்கூடும். இத்தலைவலியானது, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்ற ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்திக் கண்டறிய முடியுமானால் அவற்றை தவிர்ப்பதன் மூலம் தலையிடி ஏற்படாது தடுக்கலாம்.

 மன உளைச்சல் தலைவலி

 கழுத்தின் பின் தசைகளில்தான் இந்த வலி உருவாகும். இரவு உறக்கத்திற்குப் பிறகு தசைகள் இறுகி வலி ஆரம்பமாகும். ஒவ்வொரு முறை இந்த மன உளைச்சல் ஏற்படும்போதும் கழுத்தின் பின் தசையில் இறுக்கம் ஏற்பட்டு வலி ஆரம்பமாகும்.

 இரண்டு பக்கமும் வலி வரலாம். தலையை இறுக்கமாகப் பிடித்தாற்போல் இருக்கும். நீண்ட காலமாக இருக்கும். 25 – 30 வயதில் ஆரம்பிக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும்.

 சைனஸ் தலைவலி

 மூக்கு அடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். தலைவலி இருக்கும். மூக்கிலிருந்து நீர் வடியலாம். குனிய முடியாது. கண்களுக்கு மேலும் கீழும் வலி இருக்கும்.

முன் மண்டை முழுவதும் பரவி வலிக்கும். கண்களுக்கு அடியில் இருக்கும் காற்றறைகளில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி கடுமையாக இருக்கும்.

 தமனிகள் தொடர்பான தலைவலி

 மூளைக்கு குளுக்கோசும் ஆக்ஸிஜனும்தான் உணவு. இவை ரத்த நாளங்கள் (தமனி) வழியே மூளைக்குக் கிடைக்கின்றன. இவை செல்லும் பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டால் மூளைக்குக் கிடைக்க வேண்டிய உணவு சரியாகக் கிடைக்காது. 

அப்போது மூளையின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. இந்த தமனிகளின் பாதையில் கொழுப்புக்கட்டிகள் அடைத்துக் கொள்வதால் இந்தக் குழாய் இறுகி, ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் தடைப்பட்டுப் போகலாம். அப்போது அதன் அறிகுறிகளும் தலைவலியும் ஏற்படுகின்றன.