வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நன்றியை தெரிவித்த அமைச்சர்

#SriLanka
Mayoorikka
2 years ago
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நன்றியை தெரிவித்த அமைச்சர்

தான் ஒரு போதும் எந்தவொரு மனித கடத்தல் காரர்களுடனும தொடர்புகளை பேணவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கா தெரிவித்தார்.

 வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

 ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரு வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதானதேவையற்ற தலையீடுகளை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் இதன் ஊடாக வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

 மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “நாடு வீழ்ந்த சமயத்தில் தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்டனர். பயங்கரவாதக் குழு இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை வீழ்ந்த இடத்திலிருந்து தூக்கி நிறுத்தினார்.

 அன்று 80 சதவீதமாக இருந்த பணவீக்கம் இன்று 25 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டு மக்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்க வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பங்களிப்புக்கு எமது கௌரவத்தை தெரிவிக்கிறோம். நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

 சட்டவிரோத குடியேற்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையற்ற தலையீடுகள் மற்றும் தவறுகளை களைவதற்கு வெளிநாட்டு சேவை துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதை முற்றாக நிறுத்த அவசியமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஊழியர் சேமலாப நிதியத்தை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கட்டமைப்பொன்றினை நாம் முன்னெடுத்துச் செல்வோம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக சேவையாற்றுகையில் சேறு பூசல்கள் அதிகம் ஏற்படலாம். 

நான் ஒரு போதும் எந்தவொரு மனித கடத்தல் காரர்களுடனும தொடர்புகளை பேணவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. நான் மனித கடத்தல்காரர்களுக்கு அடிபணிந்து செயற்பட்டிருந்தால் அதுதொடர்பில் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும். பாராளுமன்றத்திலும் பேசப்பட்டிருக்கும்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!