டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் தேடும் பணியில் திடீர் திருப்பம்
டைட்டானிக் கப்பலுக்குச் சுற்றுலா சென்று மாயமான நீர்மூழ்கியை தேடும் பணியில் திடீர் திருப்பமாக, கடலுக்கடியில் ஓரிடத்திலிருந்து சப்தம் வருவதாக கனடா நாட்டு விமானப் படை விமானம் கண்டுபிடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சுற்றுலா நீர்மூழ்கியை தேடும் பணி சப்தம் வந்த இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கடலடியில் பல நூறு ஆண்டுகளாக மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பாா்வையிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சுற்றுலா நீா்மூழ்கி கப்பல் 5 பேருடன் அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் ஞாயிற்றுக்கிழமை மாயமானது.
கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலடியில் கிடந்தது கடந்த 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
நீண்ட காலமாக அது கடல் படுகையில் இருந்ததால் அந்தக் கப்பலை கரைக்கு இழுத்து வர முடியாத அளவுக்கு அது சேதமடைந்திருந்தது. அதனால் ஆழ்கடலுக்குச் சென்று அந்தக் கப்பலை கடல் ஆய்வாளா்கள், விஞ்ஞானிகள், திரைப்படத் துறையினா், கடலில் இருந்து அரிய பொருள்களை சேகரிப்பவா்கள் போன்றவா்கள் பாா்வையிட்டு வந்தனர்.
இந்த நிலையில், நியூஃபௌண்ட்லாண்ட் தீவிலிருந்து எம்வி போலாா் பிரின்ஸ் என்ற கப்பல் மூலம் டைட்டானிக் கப்பல் இருக்கும் பகுதிக்கு கடந்த வார இறுதியி எடுத்துவரப்பட்ட டைட்டன் நீா்மூழ்கி, கடலுக்குள் இறக்கப்பட்டது.
இதில் பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், நீா்முழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நாா்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவுத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 போ் இருந்தனா்.
நீா்முழ்கி மாலை 6.10 மணிக்கு கடலின் மேற்பரப்புக்கு வருவதாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அந்த நீா்மூழ்கி திரும்பி வரவில்லை. அதையடுத்து, உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினா் மாயமான நீா்முழ்கியைத் தேடும் பணி தொடங்கியது. அந்தப் பகுதியில் அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பல்கள், கனடா விமானப் படை விமானம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டைட்டன் நீா்மூழ்கி மாயமானது மிகவும் ஆழமான பகுதி என்பதாலும், அங்கு வானிலை மிக மோசமாக இருப்பதாலும் மீட்புப் பணிகளில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அவ்வளவு ஆழத்தில் இருந்து நீா்மூழ்கியை மீட்பதற்குப் போதுமான உபகரணங்கள் அமெரிக்கா, கனடாவிடமே இல்லை என்றும் கூறப்படுகிறது.
நீா்மூழ்கிக் கப்பலில் இருப்பவா்கள் சுமாா் 96 மணி நேரம் சுவாசிப்பதற்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவா்களை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டு வரும் குழுவினா் கடலின் ஆழத்தோடு மட்டுமில்லாமல் குறைந்து வரும் கால அவகாசத்தோடும் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் திடீர் திருப்பமாக, கடலுக்கு அடியிலிருந்து இடி இடிப்பது போல் வரும் சப்தம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து நீர்மூழ்கியை கண்டுபிடித்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.