அகதிகளை ஏற்றிய மீன்பிடி படகு மூழ்கிய சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

PriyaRam
2 years ago
அகதிகளை ஏற்றிய மீன்பிடி படகு மூழ்கிய சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ஐரோப்பாவை அடையும் முயற்சியில் குடியேறிகள் மற்றும் அகதிகளை ஏற்றிய மீன்பிடி படகு மூழ்கிய சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தென்மேற்கு கிரேக்கத்திற்கு அப்பால் கடந்த புதன்கிழமை மூழ்கிய இந்தப் படகில் இருந்த குறைந்தது 79 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்தில் மீட்புக் கப்பல்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றன. லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது ஆழ் கடலில் மூழ்கிய இந்தக் கப்பலில் இருந்து 104 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படகின் கீழ் பகுதியில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது உறுதி செய்யப்படும் பட்சத்தில், மத்திய தரைக்கடலில் இடம்பெற்ற மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது பதிவாக வாய்ப்பு உள்ளது. இன்னும் உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று ஓய்வுபெற்ற கிரேக்க கடலோரக் காவல்படையின் அட்மிரல் நிகோஸ் ஸ்பானோஸ் அந்நாட்டு அரச தொலைக்காட்சியான ஈ.ஆர்.டி. இற்கு தெரிவித்துள்ளார்.

உயிர் தப்பியவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு படகில் குறைந்தது 40 சிறுவர்கள் உட்பட 700 தொடக்கம் 750 பேர் இருந்ததாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கணித்துள்ளது. 

எனினும் படகில் சுமார் 100 சிறுவர்கள் இருந்ததாக சிறுவர்களை பாதுகாக்கும் அமைப்பு கணக்கிட்டுள்ளது. கிரேக்கத்தின் தெற்கு துறைமுக நகரான பீலொஸில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் இந்தப் படகு கடலில்மூழ்கி இருப்பதாக கருதப்படுகிறது. அகதிகள் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், ஐரோப்பிய அரசியல்வாதிகள் மற்றும் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் என பல தரப்பினரும் இந்த அனர்த்தம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தப் படகு மூழ்குவதற்கு முன்னர், அதனை வானில் இருந்து எடுத்த படங்களை கிரேக்க கரையோர காவல் படையினர் வெளியிட்டுள்ளனர். அதில் படகின் மேல் மற்றும் கீழ் பாகங்களில் அளவுக்கு அதிகமானவர்கள் நிரம்பி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரேக்க கடற்கரைக்கு அப்பால் - படகில் இருந்தவர்களிடம் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து இது பற்றி கிரேக்க நிர்வாகத்தை அறிவுறுத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்போது, அந்தப் படகில் இருந்து தலைமை மாலுமி சிறு படகு ஒன்றில் தப்பிச் சென்றுவிட்டதாக உதவி கோரியவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகின் இயந்திரம் செயலிழந்து, இரு பக்கமாக படகு அசைய ஆரம்பித்த நிலையில் - புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் மூழ்கி இருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் உயிர் தப்பியவர்கள் துறைமுக நகரான கலமடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மூழ்கும் நிலையில் இருந்து காப்பற்றப்பட்ட பலருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்தக் குடியேறிகள் படகில் இருந்து உயிர் தப்பிய ஒன்பது பேர்- ஆட்கடத்தல் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேக்க கரையோர காவல் படை தெரிவித்துள்ளது. இந்த சந்தேக நபர்கள் அனைவரும் எகிப்து நாட்டவர்கள் என்று கிரேக்க அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிரேக்கத்தில் மூன்று நாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதுடன், உயிரிழந்தவர்களின் உடல்கள் மரபணு சோதனைக்காக ஏதன்ஸ் நகருக்கு அருகில் உள்ள கல்லறை ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

தேவையான காலம் வரை மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

மத்தியதரை கடலைக் கடக்கும் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். கடந்த பெப்ரவரியில் தெற்கு இத்தாலியின் கலப்ரியா பிராந்தியத்தில் கட்ரோ நகருக்கு அருகில்- குடியேறிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 94 பேர் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் இருந்து வரும் அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய கிரேக்கம் பிரதான பாதையாக உள்ளது.

இந்த ஆண்டில் 70,000க்கும் அதிகமான அகதிகள் மற்றும் குடியேறிகள் ஐரோப்பாவை அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தாலியில் கரையொதுங்கி இருப்பதாக ஐ.நா தரவுகள் குறிப்பிடுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!