ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணத்தின் நோக்கம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயத்தின் நோக்கம், பாரிஸ் சொசைட்டி உறுப்பினர்களுடன் நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதாகும்.
இதேவேளை, புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போதைய உலகம் எதிர்நோக்கும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காணும் தொனிப்பொருளில் புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிரான்சின் பாரிஸில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உலக சமூகத்தை ஆட்டிப்படைத்துள்ள பல நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு முதல் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் போர் மோதல்களின் தாக்கம் வரை, உலகளாவிய சமூகம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.
அந்த சவால்களுக்கு முகங்கொடுக்க புதிய நிதி உடன்படிக்கை ஒன்றின் தேவைக்கு அமைய, கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உச்சிமாநாட்டின் மற்றொரு நோக்கம், பலதரப்பு நிதித் துறையை சீர்திருத்தம் மற்றும் கார்பன் இல்லாத, உலகளாவிய பொருளாதாரத்திற்கான பாதையை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைப்பதற்கான ஒரு முயற்சியாக இந்தப் பயணம் அமைகிறது.