பாடசாலை செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த மகளும் தாயும் டிப்பர் வாகனம் மோதி உயிரிழப்பு
வவுனியா கன்னட்டி பகுதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 9 வயது சிறுமியும் தாயாரும் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் தாயும் சிறுமியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பறையங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (16ம் திகதி) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் சிறுமியை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல பஸ் ஒன்று வரும் வரை தாயும் சிறுமியும் வீட்டின் முன் காத்திருந்தனர்.
அங்கு வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் வீதிக்கு அருகில் தாய் மற்றும் மகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
டிப்பர் வாகனம் அதிவேகமாக வந்து தாய் மற்றும் மகள் மீது மோதியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு அவர்களுடன் மற்றொரு பெண் இருந்ததால், தப்பி ஓடி உயிரை காப்பாற்றியுள்ளார்.
38 வயதான சிவலோகநாதன் சுபோகானி மற்றும் அவரது ஒன்பது வயது மகள் நிரூபா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது டிப்பரில் மூன்று பேர் இருந்துள்ளனர், அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
எனினும் பிரதேசவாசிகள் ஏனைய இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து, விபத்தினால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் டிப்பரை தாக்கி தீவைக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதன் காரணமாக மன்னார் வீதியூடான போக்குவரத்தும் சில மணித்தியாலங்கள் தடைப்பட்டது.
பின்னர் பொலிசார் வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.