இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்றி நிதி மோசடி
கணினி குற்றங்களுக்காக இவ்வருடம் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் ஊடாக 108 நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜயநெத்சிறி இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் நாட்டில் தற்போது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
2023ஆம் ஆண்டு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பதிவாகிய இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 108 ஆகும்.
கடந்த இரண்டரை வருடங்களில் இணைய குற்றங்கள் தொடர்பில் 9,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக நாடு பூட்டப்பட்ட காலத்தில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அந்த பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இதன்படி, 2021ஆம் ஆண்டு இணைய குற்றங்கள் தொடர்பாக 4,688 முறைப்பாடுகளும், 2022ஆம் ஆண்டில் 3,168 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட காலப்பகுதியில் 1,187 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்