பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பணியாளர்கள் விளக்கமறியலில்!
நாரஹேன்பிடல அல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளரின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட 7 பொலிஸாரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த பிரதான நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகர் நடுன் நிலங்க, பொலிஸ் சார்ஜன்ட் இடுனில் உதயங்க பாலசூரிய, பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிரதீப் குமார் ஆரியசிங்க, சஞ்சீவ சம்பத் குசும்சிறி, கசுன் சஞ்சய் ஹேரத், அபிஷேக் பெரேரா மற்றும் திலின மதுஷன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலைக் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 296 ஆவது பிரிவின் கீழ் இந்த குழு மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது. சந்தேகநபர்களுக்கு சிறைச்சாலைகளில் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.