சோமாலியாவில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
]கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஆளும் சோமாலிய கூட்டாட்சி அரசை ஜிஹாதி போராளிகள் அல்-ஷபாப் அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருக்கும் அல்-ஷபாப், சோமாலியா ராணுவத்தின் மீது அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த அமைதிப்படையும் அல்-ஷபாப் அமைப்பிற்கு எதிராக போராடி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அல்-ஷபாப் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உகாண்டா பாதுகாப்பு படைகளை சேர்ந்த 54 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சோமாலியா மற்றும் உகாண்டா பாதுகாப்பு படையினர், நாட்டினுள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சோமாலியாவின் ஷபிலி நகரில் பதுங்கி இருந்த அல்-ஷபாப் பயங்கரவாதிகளின் மீது பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சோமாலியா எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.