கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது: பாராளுமன்றத்தில் சூடுபிடித்த விவாதங்கள்

#SriLanka #Arrest #Parliament #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  கைது: பாராளுமன்றத்தில் சூடுபிடித்த விவாதங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில் வாத பிரதிவாதங்கள் இன்று(7) இடம்பெற்றன.

 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் சிறப்புரிமை தொடர்பில் தனிப்பட்ட பிரேரணையொன்றை இன்று சமர்ப்பிக்கவிருந்த நிலையில் அவரை பாராளுமன்றத்துக்கு வர அனுமதிக்காமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது பாராளுமன்ற உரையில் அதிருப்தி வெளியிட்டார்.

 பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை கொழும்பில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்போது சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியை இராசமாணிக்கம் சாணக்கியன் மேற்கோள் காட்டினார்.

 இவ்வாறான ஒரு நிலையில் சிவில் உடையில் சிலர் தன்னை கண்காணிப்பது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு சந்தேகம் இருப்பது சாதாரணமாக விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இதற்கு முன்னர், பாரிய குற்றச்சாட்டுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளுக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கிய நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்க சபாநாயகர் அனுமதி அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 வடக்கு - கிழக்கில் தமது அடையாளத்தை மறைத்து சிவில் உடையில் வந்து தம்மை பொலிஸார் என்று அடையாளப்படுத்தும் நபர்கள் இரவு நேரங்களில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்கு திடீரென நுழையும் மோசமான நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக சாணக்கியன் குறிப்பிட்டார். இவ்வாறான ஒரு நிலையில் நாட்டில் இரண்டு சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றதா என்றம் அவர் கேள்வி எழுப்பினார்.

 அத்துடன், இன்று கஜேந்திரகுமாருக்கு நடைபெற்ற இந்த சம்பவம் நாளை ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து, ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் மஹிந்த அமரவீர, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்தது தவறு என்றும், பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்க முடியாது என்றும், சண்டித்தனம் காட்டுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

 இதனையடுத்து, அதற்கு பதிலளிக்க சாணக்கியன் முயற்சிக்கையில் சபையில் கூச்சல் குழப்ப நிலையொன்று ஏற்பட்டது. இதன்போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சண்டித்தனம் காட்டவில்லை என்றும் பொலிஸாரே மோசமான முறையில் நடந்துகொண்டதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

 இதனையடுத்து, பலரும் ஓழுங்கு பிரச்சினையை எழுப்பி ஒலிவாங்கியை தருமாறு கூச்சலிட்ட நிலையில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கஜேந்திரகுமார் சண்டித்தனம் காட்டவில்லை என்றும், அவரிடம் மோசமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

 இதேவேளை, முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி,பாராளுமன்றத்துக்கு வந்து தனது உரிமை தொடர்பில் பேசுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் அளித்திருக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

 பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல்ராஜபக்ஷ முன்னர் வழங்கிய தீர்ப்பொன்றையும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 இதற்கிடையே எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொறாடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி, ”க​​ஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு, பாதுகாப்பு அதிகாரிகளோ, பொலிஸாரோ இல்லை என்றும் அவர், தன்னுடைய சாரதியுடன் மட்டும் தான், பயணிக்கின்றார் என்று சுட்டிக்காட்டினார்.

 இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தன்னிடம் தெரிவித்தாகவும், பொலிஸாரின் கடமைக்கு தான் இடையூறு விளைவிக்க முடியாது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!