இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் கைத்தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளது! சஜித்
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நானூறு சொத்துக்கள் கையகப்படுத்தல் மற்றும் ஏலங்கள், செலுத்தப்படாத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது ஒரு வருந்ததக்க நிலை எனவும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இந்த பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
காலத்திற்கு ஏற்றவாறு சட்டம் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக வங்கி வட்டி காரணமாக சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த வர்த்தகர்களின் கடனை குறிப்பிட்ட அளவில் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
குத்தகை நிறுவனங்கள் சட்டவிரோதமான முறையில் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், இது அநாகரீகமான வாகனக் கொள்ளை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீட்டுத் திட்டங்களுக்கு இடையூறாக இருக்கும் ஐந்து இலட்சம் என்ற வரம்பை ஒரு இலட்சமாக குறைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் கைத்தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஆடைகளுக்கான ஆர்டர்களை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாமல் போவதாகவும், சிறு, குறு தொழில் அதிபர்கள் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.