மூடப்படும் பணியகம்: இலங்கையில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அச்சத்தில்
இலங்கையில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஏதிலிகளாக தங்கியிருப்போர் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் முகாமைத்துவ பணியகம், மூடப்படும் என்ற காரணத்தினால் இவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருக்கும் போது, புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஏதிலிகள் பொது சுகாதார அமைப்புக்கான அணுகலைக் கொண்டுள்ளனர், அத்துடன் ஏதிலிகளாக அங்கீகரிக்கப்பட்டவுடன், ஐக்கிய நாடுகளின் அமைப்பு, மாதாந்த வாழ்க்கைக் கொடுப்பனவையும் வழங்குகிறது.
உதவித்தொகையின் ஒரு பகுதியாக, ஏதிலிகளின் குழந்தைகள் பள்ளிக் கல்விக்கான நிதியையும் பெறுகிறார்கள். இந்தநிலையில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் பணியகத்தின் 2023 நிதித் தேவைகளில் 21வீதம் மட்டுமே இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020 ஆண்டு நவம்பர் மாதத்தில் மாத்திரம் இலங்கையில் 1,253 ஏதிலிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்தனர். அத்துடன் 2022 டிசம்பரில், இலங்கை கடற்படை மியான்மரில் உள்ள ரக்கைன் மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்த 105 ரோஹிங்கியா மக்களை இலங்கைப்படையினர் காப்பாற்றிய நிலையில் அவர்களும் தற்போது இலங்கையில் வசிக்கின்றனர்.
ஆனால் இப்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான அலுவலகம் மூடப்படும் என்ற வாய்மொழி, ஏதிலிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.