யாழ்ப்பாணத்தில் மீற்றருள்ள ஆட்டோக்களே சேவையில் ஈடுபட அனுமதி
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென, யாழ். மாவட்டச் செயலர் ஆ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்,
யாழ். மாவட்டச் செயலகத்தில் கடந்த புதன்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
வாடகைக்கு அமர்த்திச் செல்லப்படும் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தாமையால், அதிகளவில் கட்டணம் அறவிடப்படுவது உட்பட பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இம்முறைப்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக முச்சக்கர வண்டி வாடகைச் சங்கத்தினர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், யாழ். மாநகரசபை பிரதிநிதி, வடமாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதிக்கு முன்னர், வாடகைக்கு சேவையில் ஈடுபடும் சகல முச்சக்கர வண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மீற்றர் பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகள் வாடகைக்கு சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுப்பதுடன், தரிப்பிடங்களில் முச்சக்கர வண்டிகளை தரித்து வைப்பதற்கான பதிவை இரத்துச் செய்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.