கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவோம்: IMF

#SriLanka #IMF
Mayoorikka
2 years ago
கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவோம்: IMF

இந்தக் கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு பல அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாக கென்ஜி ஒகாமுரா தெரிவித்தார்.

 இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்தமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா உள்ளிட்ட பணிப்பாளர்களுக்கு இந்நாட்டின் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக சபாநாயகர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரிடம் தெரிவித்தார்.

 அதேபோன்று, தற்போதைய நெருக்கடியை தீர்க்க பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தேவையான கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டதாகவும் பாராளுமன்றம் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

 மேலும், மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய புதிய பொருளாதாரப் நோக்குக்காக பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை அமைத்தல், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகம் செய்தல், புதிய மத்திய வங்கிச் சட்டத்தை அறிமுகம் செய்தல் போன்ற பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 நேற்று பிற்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியும் பிரதி செயலாளர் நாயகமுமான டிகிரி கே. ஜயதிலக்க, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து ஆகியோர் வரவேற்றனர்.

 சபாநாயகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து கென்ஜி ஒகாமுரா அவர்கள் பாராளுமன்ற சபா மண்டபத்தைப் பார்வையிட்டார். அதனையடுத்து அவர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கத்தவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

 அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா பாராளுமன்றத்திற்கு வருகை தரும் விசேட விருந்தினர்களின் பதிவேட்டில் நினைவுக் குறிப்பை பதிவு செய்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!