கப்பலில் வந்த லிதுவேனியன் காலி துறைமுகத்தில் இறங்க முயன்ற போது கடலில் விழுந்து மரணம்
சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி பயணித்த கப்பல் இன்று வியாழக்கிழமை காலை பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக காலி துறைமுகத்தை வந்தடைந்த போது எதிர்பாராத விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கப்பலில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர், கப்பல் நின்றபோது காலி துறைமுகத்தில் உள்ள ஜெட்டியில் இறங்கும் போது கடலில் விழுந்துள்ளார்.
அவர் நீரில் மூழ்கியபோது, கடற்படை வீரர்கள் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டார். வெளிநாட்டவரை தாம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாகவும், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும் காலி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், உயிரிழந்தவர் 61 வயதுடைய லிதுவேனியா பிரஜை என தெரியவந்துள்ளது.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காலி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மற்றும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.