சீன முதலீட்டில் பண்ணையா?விபரங்களை தாருங்கள் - அங்கயன்
யாழில் வழங்கப்பட்ட அட்டைப் பண்ணைகளின் பயனாளிகள் விவரங்களை அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை முன்வைத்தார். நேற்றையதினம் புதன்கிழமை யாழ். மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் இரண்டாவது கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்டத்தில் வழங்கப்பட்ட அட்டைப் பண்ணைகள் தொடர்பான விபரங்களை வழங்க முடியுமா? என நெக்டா நிறுவன வட மாகாண அதிகாரியிடம் கேட்டார்.
இதன்போது குறிக்கிட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் சீனர்களுக்கு அட்டப்பண்ணை இருக்கா என துறை சார்ந்த அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது பாதிலளித்த நெக்டா அதிகாரி அரியாலையில் கடல் அட்டை ஆரம்ப குஞ்சு பொரிக்கும் நிலையம் மட்டும் சீனர்களின் பண்ணையாக இருக்கிறது வேறு எங்கிலும் இல்லை என்றார்.
இதன்போது கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிக்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது இதில் யாராவது முதலீடு செய்து இருக்கிறார்களா? என அதிகாரியும் பார்த்து கேள்வி எழுப்பினார். இதன்போது பதில் அளித்த அதிகாரி, கடல் அட்டைப் பண்ணைகளுக்கான அனுமதி கடற்தொழில் சங்கங்கள், பிரதேச செயலாளர் , நீரியல் வளத் தினணைக்களம் மற்றும் நாறா போன்ற நிறுவனங்களின் சிபாரிசுடன் வழங்கப்படுகிறது. மேலும் பண்ணையாளர்கள் 98 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் 2 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் அவ்வாறாயின் பயனாளிகள் பட்டியலை அடுத்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பியுங்கள் என்றார்.
இதன் போது குறிக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அடுத்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னதாக பெயர் பட்டியலை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அதனை சரி பார்த்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விபரங்களை அடுத்த கூட்டத்திற்கு வழங்குவதற்காக அதனை தனக்கு அனுப்பி வைக்குமாறு நெக்டா பணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.