மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் அதிநவீன திட்டம்: புலனாய்வு அமைப்புகள் அறிக்கை
மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் பல்வேறு குழுக்களால் அதிநவீன வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் பாதுகாப்பு சபைக்கு அறிக்கை அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி, பாதுகாப்பு தரப்பினர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு முழு கவனம் செலுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இக்கட்டான தருணத்தில், நாட்டில் மற்றுமொரு நெருக்கடியை உருவாக்க பல்வேறு குழுக்கள் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவோ இவ்வாறு குறுகிய நோக்கத்துடன் செயற்பட முற்பட்டால், அரசியலமைப்பின் ஒன்பதாவது அத்தியாயம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் விதிகளின்படி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.