சிங்கள பயிற்சி வகுப்பினை நிறைவு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது
அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 25 நாள் சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு காவத்தமுனை அல்- அமீன் வித்தியால பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர் ஏ.கே.எம்.றிம்ஸான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G திஸாநாயக்க கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் விஷேட அதிதிகளாக அல்-அமீன் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.பீ.எம்.அலியார், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர்களான எம்.எம்.செய்னுதீன், எம்.ஐ.பாறூக்,இப்பயிற்சி வகுப்பின் இணைப்பாளர் ஏ.ஜே.எம்.சாஜித் நழீமி உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தமிழ் மொழி பேசும் ஆசிரியர்கள், அரச ஊழியர்களினால் கண்கவர் கலை கலாசார நிகழ்வுகள் சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளையும் இலகுபடுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.
தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், சிங்கள மொழி மூலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளுதல் எனும் நோக்கத்துடனேயே இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது நிகழ்வின் ஏற்பாட்டாளர்களினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.