வாழைச்சேனை மத்தி முஸ்லிம் பிரதேச பொதுக்காணியை கபழீகரம் செய்யத்திட்டம் : சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மௌனம் காப்பது ஏன்?
மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பொதுத்தேவைகளுக்காக அடையாளங்காணப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்ற பல அரச காணிகளை சிலர் திட்டமிட்டு கபழீகரம் செய்வதற்கு தயாராகி வருவதாக தொடர்ந்தும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இதனடிப்படையில், கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மயிலங்கரச்சை பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஒட்டமாவடி பிரதேச சபையினால் குப்பை கொட்டப்பட்டு வந்த சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அரச காணி மற்றும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவர்களினால் சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட காணி குத்தகைக்கு பெற்று தொழில்நுட்பக் கல்லூரி நிர்மாணம் என்ற பெயரில் நீண்ட காலம் பேசப்பட்டு வந்த நிலையில், அதனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் தனது அதிகாரத்தைக் கொண்டு மீளப்பெற்றுள்ளார்.
தற்போது ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழுயங்கும் ஜிம் சென்டருக்கு 4 ஏக்கரும் அப்பகுதியில் புதிய வீட்டுத்திட்டமொன்றை அமைப்பதற்கு 4 ஏக்கர் காணியும் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 14 ஏக்கர் காணி எஞ்சியுள்ள போதிலும், இக்காணியே எதிர்காலத்தில்ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச முஸ்லிம் மக்களின் பொதுப்பயன்பாட்டிற்கும் தேவைக்குமாக காணப்படுகிறது.
எதிர்காலத்தில் வாழைச்சேனை மக்களின் நீண்டகாலக் கனவாகக்காணப்பட்டு வருகின்ற வாழைச்சேனை மத்தி பிரதேச சபை கிடைக்கின்ற பட்சத்தில் இக்காணியில் அதன் அலுவலகத்தை அமைத்து மக்களுக்கான சேவையை வழங்குவதற்கு பொருத்தமான இடமாகவும் அல்லது வேறு பொதுத்தேவைகளுக்கு இதனைப் பயன்படுத்த முடியுமென அடையாளப்படுத்தப்படுகின்றது.
சமூக நலனைக்கருத்திற்கொண்டு அண்மையில் வாழச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு இக்காணியினை பராமரிப்பதற்கு பிரதேச செயலாளர் கையளித்துள்ளதாக அறிய முடிகிறது. இவ்விடயம் வரவேற்கத்தக்கதாகும்.
இந்நிலையில், இவ்வாறான பொது அரச காணிகளை ஒரு கும்பல் திட்டமிட்டு கபழீகரம் செய்வதற்கு முனைந்து வருவதாக அறிய முடிகிறது. இதற்கு உறுதுணையாக சில அரச அதிகாரிகள் இலஞ்சத்தினைப் பெற்றுக்கொண்டு செயற்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், இக்காணியினைப் பாதுகாப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் பிரதேச செயலகம் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளவில்லை எனவும் குறைந்தபட்சம் இது அரச காணி என்ற அடையாளம்ப்படுத்தலை கூட இவர்கள் இங்கு மேற்கொள்ளவில்லை என சமூகச்செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை,பள்ளிவாயல்கள், பிரதேச சமூக மட்ட அமைப்புகள் விழிப்புடன் செயற்பட்டு இக்காணிகளைப் பாதுகாக்க முன் வர வேண்டும். இதனை நாம் தவற விடுகின்ற போது, எதிர்காலத்தில் நாம் கை சேதப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம்.
இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் சுற்றாடல்துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் கவனஞ்செலுத்த வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.




