பேர்ள் எக்ஸ்பிரஸ் மூலம் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி மனு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு துறைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களிடம் இருந்து ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டஈடாக அறவிடுமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வன அரணா அறக்கட்டளை உள்ளிட்ட நான்கு தரப்பினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் பிரதிநிதி நிறுவனமான C Consortium Lanka நிறுவனம் உட்பட 8 நிறுவனங்கள், அந்தக் கப்பலின் உரிமையாளர், காப்புறுதியாளர் மற்றும் நடத்துனர் என பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.
குறித்த கப்பலில் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தீப்பற்றியதன் காரணமாக கப்பலில் இருந்த எரிபொருள் நீரில் கலந்து நாட்டிற்கு பாரிய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பலில் இருந்து கசிந்த இரசாயனக் கசிவினால் கடலில் பாரிய மாசு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இரசாயனங்கள் காற்றில் கலப்பதன் மூலம் காற்று மாசுபாடும் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆமைகள் உள்ளிட்ட ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏராளமான மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈடு வழங்க சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கப்பல்களினால் ஏற்பட்ட பாரபட்சத்திற்காக பிரதிவாதிகளிடமிருந்து 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நட்டஈடு வழங்க உத்தரவிடுமாறும் உரிய மனுவில் கோரப்பட்டுள்ளது.