தெஹிவளை ஏசி தொழிற்சாலையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம்: 14 பேர் கைது
தெஹிவளை, களுபோவில வீதியிலுள்ள குளிரூட்டும் பழுது மற்றும் விற்பனை நிலையமொன்றில் இருவரை ஊழியர்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்து களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம்(09) இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிண்ணியா, களுத்துறை, பண்டாரகம, நிலாவெளி, காலி, பேருவளை, கந்தளாய், ரவன்வெல்ல மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தில்சன் ரங்க குமார (வயது 27) என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய 14 ஊழியர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தெஹிவளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பி.ஓ.பி. திரு அனுராத ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் லியனாராச்சி தலைமையில் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.