எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு சர்வதேச நீதிமன்றம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைக்கு உள்ளூர் நீதிமன்றமா? சாணக்கியன் கேள்வி
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிமன்றம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உள்ளூர் நீதிமன்றமா? என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர்,
‘எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில். இதன் விசாரணை தொடர்பில் சர்வதேச நீதி மன்றங்கள், வெளி நீதியரசர்கள் மற்றும் சுயாதீன விசாரணை வேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஏன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பான மீறல்களை விசாரணை செய்ய உள்நாட்டு நீதி மன்றங்களே போதும் என்று இரட்டை வேடம் போடுகின்றனர்’. என கேள்வியெழுப்பினார்.
இலங்கையின் நீதித்துறை மூலம் இந்த விடயத்தை கையாளமுடியும் என்ற நிலையில் சர்வதேச நீதிமன்றம் இதற்கு அவசியமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது.
எனினும் இலங்கையின் கடற்பரப்பில் பாரிய சேதத்தை விளைவித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விடயத்தில், வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இதிலிருந்து ஏதோ ஒன்றை இலங்கை அரசாங்கம் மறைக்கமுயல்கிறது என்றே சந்தேகம் கொள்ளவேண்டியுள்ளது என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.