இம்ரான் கான் கைது - வன்முறையால் ஒருவர் உயிரிழப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தார். இதற்கிடையே ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இம்ரான்கான் நேற்று மதியம் இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த துணை ராணுவத்தினர் இம்ரான்கானை கைது செய்து குண்டுக்கட்டாக கோர்ட்டில் இருந்து இழுத்து சென்றனர்.
அவரை வாகனத்தில் ஏற்றி ராவல் பிண்டியில் உள்ள ஊழல் தடுப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோர்ட்டில் இம்ரான் கான் இருந்து அறையில் ஜன்னல், கண்ணாடி கதவுகளை உடைத்த துணை ராணுவத்தினர் அவரை தாக்கி அழைத்துச் சென்றனர் என்று தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.