களுத்துறை சம்பவத்தின் சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த உத்தரவு
களுத்துறையில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனிய பொலிஸாருக்கு இன்று அனுமதியளித்துள்ளார்.
சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தினால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை, இசுரு உயன, இலக்கம் 63 இல் வசிக்கும் தனுஷ்க கயான் சஹபந்து என்பவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த 5ஆம் திகதி களுத்துறை தெற்கு பிரதான வீதி, இலக்கம் 402, பிரதான வீதியில் அமைந்துள்ள Sicilian Walk ஹோட்டலின் அறை இலக்கம் 7ல் சந்தேகநபரும் உயிரிழந்த சிறுமியும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
மேலும் இரத்த மாதிரியை எடுத்து அவரிடம் மேலும் விசாரிக்க விரும்புவதாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இது கொலை அல்ல, தற்கொலை என சட்ட வைத்தியர் முடிவெடுத்துள்ளதாக பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு வரும் 12ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.