டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள்
இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை வயதுடைய சிறுவர்கள் என சுகாதார பூச்சியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் பூச்சியியல் அதிகாரிகள் 99 வீதமான பாடசாலைகளில் நுளம்பு லார்வாக்களை கண்டறிந்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் டிஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பூச்சியியல் உத்தியோகத்தர்கள் வழங்கிய தரவுகளை முறையாகப் பயன்படுத்தாமை, கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளாமை, புகைப் புகைத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமை போன்ற காரணங்களால் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இது அமைந்துள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.