முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், காரைநகரில் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி உள்ளது.
அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரிக்கு முன்னால் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சியும், முள்ளிவாய்க்கால் நினைவு துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு இதே வாரத்தில் மிகவும் கொடூரமான யுத்தம் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்றுக்கொண்டு இருந்தது.
இதன்போது இலட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த மக்கள் உண்ண உணவு இன்றி உப்பு இல்லாத கஞ்சியையே உட்கொண்டு உயிரை கையில் பிடித்து வைத்திருந்தார்கள். அதனை நினைவுகூரும் முகமாக இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படுவதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை என வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நினைவேந்தலின் இறுதி நாள் மே 18 ஆகும்.



