புத்தர் மற்றவர்களை காயப்படுத்தி தனக்கு விஹாரை கட்டுங்கள் என சொல்லவில்லை!

கௌதம புத்தர் சிங்கள இனத்தவரோ, அல்லது சிங்கள இனத்தவர்களுக்கு மட்டும் சொந்தமான கடவுளோ அல்ல. அவர் இன்றைய நேபாளத்தில் உள்ள, லும்பினி என்னுமிடத்தில், வைகாசி மாதத்துப் பூரணை தினத்தில் சாக்கிய குலத்தில் பிறந்தவர்.
அவர் தன்னைக் கடவுள் என்றோ, கடவுளின் தூதுவர் என்றோ, கடவுளின் புதல்வன் என்றோ, கடவுளின் அவதாரமென்றோ ஒரு போதும் சொல்லிக் கொண்டதில்லை.
அவர் வாழ்ந்த காலத்தில் பௌத்தம் என்ற ஒரு மதத்தை அவர் உருவாக்கவில்லை.அவரது இறப்புக்கு பின்னர் ஒன்றுகூடிய அவரது சீடர்களான பிக்குகளே சங்கம் ஒன்றை நிறுவிப் புத்தரது போதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றார்கள்.
அப்போதும் கூட அவர்கள் அவரைக் கடவுள் என்றோ வரம் கொடுக்கும் சாமி என்றோ பிரகடப்படுத்தவில்லை.இந்தப் பிக்குகளால் உருவாக்கப்பட்ட மத அமைப்பே தேரவாதம் ஆகும்.
இந்தத் தேரவாத அமைப்பிலிருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட அமைப்பே மகாயான பௌத்தமாகும்.இதுவே புத்தரைக் கடவுளாகவும் அவதார புருஷராகவும் வரம் கொடுக்கும் சாமியாகவும் பிரகடப்படுத்தியது.
இந்த மதப் பிரிவு தமிழ் நாட்டில் தமிழ் பிக்குகளால் உருவாக்கப்பட்டு உலகெங்கும் பரப்பப்பட்டது. இன்று இலங்கையில் இருப்பது தமிழர்களால் உருவாக்கப்பட்ட பௌத்த வழிபாடு முறையே.
இதைச் சிங்கள மக்களுக்கு உணர்த்துவதற்கு நம்மவர்களுக்கு எது தடையாக இருக்கிறது .விஹாரையோ கோவிலோ தேவாலயமோ மசூதியோ அமைப்பது ஒன்றும் பிரச்சனை இல்லை.
அதை அமைப்பவர்கள்தான் பிரச்சனைக்குரியவர்களாக இருக்கிறார்கள். ஒரு குறுணி கல் கூட அதிகாரத்தின் சின்னமாக ஒரு இடத்தில் வைக்கப்படுமாக இருந்தால், அது ஆக்கிரமிப்பு சின்னமாகவே கருதப்படும்.
கௌதம புத்தர் மற்றவர்களின் மனங்களைக் காயப்படுத்தி தனக்கு விஹாரை காட்டுங்கள் என்று ஒருபோதும் சொல்லவில்லை.



