பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் சட்டவிரோதமாக இந்தியா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் சட்டவிரோதமாக இந்தியா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கையர்கள் இந்தியா சென்றடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 06 பேர் மன்னாரில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்லவிருந்த 05 பேரும் மன்னார் பள்ளிமுனை பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 5 பேரும் வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என்பதுடன் அவர்களில் 07 மற்றும் 14 வயதான சிறுவர்களும் 16 வயதான சிறுமியும் 38 வயதான ஆண் ஒருவரும் 37 வயதான பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர்.
ஐவரையும் இந்தியாவிற்கு படகு மூலம் அழைத்துச் செல்லவிருந்த படகோட்டி மன்னாரைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



