அதிகரித்து வரும் சீனி விலை குறித்து நுகர்வோர் அதிகாரசபை விசேட கவனம்

சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளது.
சீனியின் விலையை அதிகரிப்பதற்காக வர்த்தகர்கள் கையிருப்புகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பில் துரித சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரசபை எதிர்பார்க்கிறது.
இவ்வாறு சீனி கையிருப்புகளை மறைத்து வைத்தால், அவை காவலில் எடுத்து நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம். அதன்படி, தற்போது பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 230 ரூபாயாக இருந்தது.
ஆனால் தற்போது ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 250 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



