ஒட்சிசன் சிலிண்டர்களை திருடிய நபர்கள் கைது

பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் நிரப்பப்பட்ட மற்றும் வெற்று ஒட்சிசன் சிலிண்டர்களை திருடி வேறு மாகாணங்களுக்கு விற்பனை செய்த வைத்தியசாலையின் ஒட்சிசன் விநியோக திணைக்களத்தின் சுகாதார உதவியாளர் உட்பட ஆறு பேர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சிலிண்டர்கள் ஏற்றப்பட்ட லொறியுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பொலன்னறுவை பலுகஸ்தமன பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவராவார்.
மேலும், சந்தேகநபர்கள் ஹெயன்துடுவ மற்றும் ராஜகிரிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் சிலிண்டர்களை வழங்கும் தனியார் நிறுவனமொன்றின் பணியாளர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பிரகாரம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் ஒட்சிசன் விநியோகப் பிரிவின் சுகாதார உதவியாளர் ஒட்சிசன் சிலிண்டர் ஒன்றை தனியார் ஒட்சிசன் விநியோகஸ்தர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபா வரையில் விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



