வல்வெட்டித்துறை ஆலயத்தில் பறக்கவிடப்பட்ட புகைக்குண்டினால் ஏற்பட்ட விபத்து

யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக்குண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது விழுந்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது .
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய இறுதிநாளான தீர்த்த திருவிழாவின் இந்திரவிழா நிகழ்வு வெகு விமர்சையாக நேற்று இரவு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான புகைக்குண்டுகள் வானை நோக்கி பறக்கவிடப்பட்டன. அதில் ஒரு புகைக் குண்டு வானில் பறக்கவிடப்பட்டு சிறிது வினாடிகளில் மீண்டும் கீழ்நோக்கி விழுந்து பருத்தித்துறை தும்பளைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மேல் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்.
இதேவேளை வல்வெட்டித்துறையில் புகைக்குண்டு விடும் சம்பிரதாயம் நூற்றாண்டு கடந்தும் தற்பொழுதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆரம்பகாலங்களில் வல்வெட்டித்துறையில் உள்ள முன்னோர்கள் கப்பலோட்டுவதில் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதன் காரணமாக கடல்மார்க்கமாக வணிக நடவடிக்கைகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றுவந்து இருந்தனர்.
இந்த நிலையில் பர்மா சென்றுவந்த முன்னோர்களினால் பர்மாவில் இருந்த புகைக்குண்டு விடும் நடைமுறையை பார்த்து வந்து இலங்கையில் வல்வெட்டித்துறையில் அந்த தொழிநுட்பத்தினை பயன்படுத்தி புகைக்குண்டு விடும் நடைமுறையினை முன்னெடுத்து வந்திருந்தனர்.
புகைக்குண்டு பறக்கவிடுதல் இலங்கையில் வல்வெட்டித்துறையில் மட்டுமே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



