இந்த வருடத்தில் தீர்க்கமான உடன்பாடு எட்டப்படும் - ஜனாதிபதி உறுதி மொழி

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வருடத்தில் உடன்பாடு எட்டப்படுமென எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது சர்வதேச தொழிலாளர் தின அறிக்கையில் ஜனாதிபதி உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனது உந்துதல் அரசியலில் வேரூன்றவில்லை, மாறாக நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகித்தல் மற்றும் குடிமக்கள் மீதான சுமைகளைக் குறைப்பதில் இருந்தது” என்று ஜனாதிபதி தனது மே தின உரையில் மேலும் தெரிவித்தார்.
"இந்த காரணத்திற்காக, நான் ஜனாதிபதியின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மற்றும் அதனை அடைய ஆதரவான அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது திறனில் எனக்கு நம்பிக்கை இருந்தது", என்று அவர் கூறினார்.
“2048 இலங்கையின் வளர்ச்சி ஆண்டாக இருக்கட்டும். தற்போதைய சந்ததியினருக்காக மட்டுமல்ல, எதிர்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் இந்த பொருளாதாரத்தை நாங்கள் கட்டியெழுப்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் போது நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சமூகங்களின் உரிமைகளை மதித்து, பாதுகாத்து முன்னேறுவது முக்கியம் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் பரஸ்பர இணக்கமான தீர்வை எட்ட உத்தேசித்திருப்பதாக அவர்மேலும் கூறினார்.



