லிஸ்டீரியா பாக்டீரியாவைப் பற்றி வெளியான தகவல்

பதுளை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் லிஸ்டீரியா பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரத்தினபுரி, எரட்ன ஸ்ரீ பாத வீதியிலுள்ள கடையொன்றில் இந்த பாக்டீரியா தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, ஸ்ரீ பாத வீதியிலுள்ள கடைகளை இன்று சுகாதார திணைக்களம் சோதனையிட நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில், சிறிபா தரிசனம் செய்த பக்தர்கள் சிலர் லிஸ்டீரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஹட்டன் ஸ்ரீ பாத வீதியிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பால் சம்பந்தமான பொருட்களின் மாதிரிகளை பெற்றுக்கொள்ள சுகாதார திணைக்களம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
பலபத்தல சிறிபா வீதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களும் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
லிஸ்டீரியா பாக்டீரியம் தொற்றுக்கு உள்ளானதாக கூறப்படும் நபர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் எரட்ன பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு மாத்திரமே நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



