கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் மரணம் ஏற்பட்டுள்ளது: வசந்த முதலிகே

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பில் நடத்திய போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டு வீச்சுக்கு இலக்காகி கொழும்பு பல்கலைக்கழக உள்ளக பாதுகாப்பு பிரிவின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். .
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீடத்துக்குள் பிரவேசித்தமைக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியமும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் இன்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, நேற்றைய போராட்டத்தின் போது கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட வளாகத்தில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பில் சட்ட பீட மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டது.



