முன்னாள் பிரதி அமைச்சருக்கு சிறைத்தண்டனை

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபாவை வழங்கியமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை குற்றவாளியென தீர்ப்பளித்தது.
அந்த தண்டனைக்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு ஐநூறு ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடியுரிமையும் ஏழு ஆண்டுகளுக்குப் பறிக்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இந்த வழக்கின் பிரதிவாதி முறைப்பாட்டாளரான முஸம்மில் எம்.பியின் கருத்தை மாற்றும் நோக்கில் பணம் வழங்கியுள்ளதாக சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக தீர்ப்பை வழங்கிய நீதிபதி குறிப்பிட்டார்.
முறைப்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மிலுக்கு வெளிநாடு செல்வதற்காக பிரதிவாதி இந்தத் தொகையை வழங்கியதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நோக்கத்திற்காக பணம் கொடுக்கப்பட்டது என்பதை நிரூபிக்கத் தவறியதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதன்படி, பிரதிவாதி மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 80(1)ஏ பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தை பிரதிவாதியே செய்துள்ளார் என தீர்ப்பளித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



