பணவீக்கத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பணவீக்கத்தை படிப்படியாகக் குறைப்பது தொடர்பில் வங்கி வட்டி வீதங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு, மின் கட்டணம், இயந்திர பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு மற்றும் அனைத்து உற்பத்தி மற்றும் நிர்வாக செலவுகள் காரணமாக, ஒரு கிலோ அரிசியின் உற்பத்தி செலவு அதிகரித்து, அந்த தயாரிப்பு விலையுடன் ஒப்பிடும்போது, தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சந்தையில் தற்போதுள்ள அரிசி விலைக்கே தமது பொருட்களை விற்பனை செய்வதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி, நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரிசி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.



