மருத்துவப் பொருட்கள் கொள்வனவு தொடர்பில் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

இரண்டு இந்திய தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அமைச்சர்கள் அமைச்சரவை, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் என்பன இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
47 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பதிவு செய்யப்படாத தனியார் விநியோகஸ்தர்களின் மூலம் மருத்துவப் பொருட்களை வாங்குவதில் அமைச்சர்களின் அமைச்சரவையின் பங்கு, பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை வாங்குவதற்கு பதிவு விலக்கு வழங்குவதில் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குமுறை ஆணையகத்தின் பங்கு, அவசரகால கொள்முதல் செயல்முறை உட்பட கொள்முதல் வழிகாட்டுதல்களுடன் இணங்காமை, சுகாதார அமைச்சர் மற்றும் மருந்தாக்கல் ஆணையக தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்முறையை தவறாக பயன்படுத்துதல் என்பவற்றை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்துக் கொள்வனவு, மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் புறக்கணிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதியை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது.
அத்துடன் குடிமக்களின் அடிப்படை உரிமையான சமத்துவம் மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவை இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



