எரிசக்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள இலங்கை - இந்தியா!

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரோகொட, அடுத்த இரண்டு மாதங்களில் எரிசக்தி பரிமாற்ற இணைப்பை ஆரம்பிக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திடவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், வர்த்தக உடன்படிக்கையை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என இலங்கையும் இந்தியாவும் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் பெரும்பகுதி வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அபிவிருத்தி செய்வதிலேயே தங்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஆற்றல் பரிமாற்ற இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர முடியும் என்றும் மிலிந்த் மொரோகொட குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரம் கடத்தும் தொடர்பை ஆரம்பிக்கும் திட்டத்திற்கான முன்மொழிவு சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.கடந்த வருடம் இலங்கையும் இந்தியாவும் அது பற்றிய விவாதங்களை மீண்டும் ஆரம்பித்தன.
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆற்றல் பரிமாற்ற இணைப்பை ஏற்படுத்த முடிந்தால், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடியும் என மொரொகொட சுட்டிக்காட்டியுள்ளார்.



