நீதவானின் உத்தியோகபூர்வ காரை கொள்ளையடித்த சந்தேகநபர் விளக்கமறியலில்

குளியாப்பிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி திரு அமில சம்பத்தின் உத்தியோகபூர்வ காரை கொள்ளையடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (15) கஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் தமிந்த ராமநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், சந்தேகநபரை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி குளியாப்பிட்டிய நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான திரு அமில சம்பத், விற்பனைக்கு உள்ள பிலியந்தலை பகுதியில் உள்ள அவரது வீட்டின் மேல் மாடியில் வைத்து பூட்டி விட்டு, சந்தேக நபர் உத்தியோகபூர்வ காரை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணையின் போது ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் திருடப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர் தங்கியிருந்த ஹோமாகம பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இரண்டு ஏர் பிஸ்டல்கள், இரண்டு கூரான கத்திகள், ரம்போ கத்தி, ஏர் பிஸ்டல்களுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு பந்துகள், விஷத் திரவம் கொண்ட போத்தல், மிளகாய் பொடி அடங்கிய பை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பேலியகொட பிரதேசத்தில் விஷ திரவம் கலந்து நபரிடம் 27 இலட்சம் டொலர் தாள்களை கொள்ளையடித்தமை, பம்பலப்பிட்டியில் கூரிய ஆயுதத்தினால் நபரொருவரை கத்தியால் குத்தி எயார் பிஸ்டலை கொள்ளையடித்தமை மற்றும் ஒருவரை மோசடி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளும் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபருக்காக சட்டத்தரணி எவரும் ஆஜராகாமல் இருந்தமையும் விசேட அம்சமாகும்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனியவின் பணிப்புரையின் பேரில், மலையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



