பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட இறுதி கட்டண முறைக்கு அனுமதி வழங்கப்படவில்லை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட இறுதி கட்டண முறைக்கு, ஆணைக்குழு தலைவரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும், ஆணைக்குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக நேற்று காலை முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த முன்மொழிவில் இறுதி கட்டண முறை குறித்து, மின் கட்டண பிரிவால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும் ஆணைக்குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களான செயலாளர் சத்துரிக்கா விஜேசிங்க, டக்ளஸ் என். நாணயக்கார, மற்றும் எஸ்.ஜி. சேனாரத்ன ஆகியோர்,முன்மொழிவுக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், அதற்குப் பதிலாக இலங்கை மின்சாரசபையின் உயர் கட்டண முறையை அங்கீகரித்துள்ளனர்.
மின்சார சபையின் கட்டண முன்மொழிவுக்கு அமைய மேலதிகமாக மின்சார நுகர்வோரிடமிருந்து வருடாந்தம் 288 பில்லியன் ரூபா வருமானமாக திரட்டப்படவிருந்தது.
எனினும் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவின்படி, கட்டண உயர்வு, 36வீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டு; கூடுதல் வருமானத்தை 142 பில்லியன் ரூபாய்களாக்கியது.
இந்தநிலையில் இலங்கை மின்சாரசபை முன்மொழிந்த பிரேரணையின்படி, உள்நாட்டுத் துறையில் 90 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் குழுக்கள் 250வீத கட்டண உயர்வை எதிர்கொள்வர் என்று பொதுப்பயண்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.



