சர்வதேச நாணயநிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் இந்தியாவிற்கு விளக்கம்!

நிதி வசதியைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் மற்றும் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து இலங்கை, இந்தியாவுக்கு விளக்கமளித்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று புதுடெல்லியில் உள்ள நிதியமைச்சில் சந்தித்து, இந்த விளக்கத்தை வழங்கினார்.
2023 பெப்ரவரி 24-25ஆம் திகதிகளில் பெங்களுருவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள ஜி20 நிதி அமைச்சர்களின் கூட்டத்திற்கு முன்னதாக இந்திய நிதியமைச்சர் மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகர் இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள அவசரத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடனை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.



